அரசியல்

நாம் அன்றிலிருந்து “கோடா கோ ஹோம்”தான்! – மனோ தெரிவிப்பு

Published

on

“தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக,பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாகப் பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக எமக்குத் தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன. ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி – அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரமும் இந்தச் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

இது பற்றி மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:-

“தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும், காலிமுகதிடல், ‘அனைத்துக் கட்சி போராளிகள்’ (அகபோ) தூதுக் குழுவினக்கும் இடையிலான சந்திப்பு எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பில் திகாம்பரம் எம்.பியும் கலந்துகொண்டார். ‘அனைத்துக் கட்சி போராளிகள்’ (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பதி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின்போது, தொடர்ந்து த.மு.கூ. – அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளைப் பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, த.மு.கூட்டணியின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்துக் கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

இவர்களிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் நான் எடுத்துக் கூறியது, தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் எனத் துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாகப் பாருங்கள்.

தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கின்றார்கள்.

கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே, இவை எமக்கு சகஜம். ஆகவே, புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்துக்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தைக் கொண்டுவர சொல்லிவிட்டு, நீங்கள் ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்தத் தேடலில் நீங்களும் நேரடியாகப் பங்களியுங்கள். அந்தத் தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.

மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகின்றது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.

இவற்றுக்கு, அனைத்துக் கட்சி போராளிகள் (அகபோ) சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது, நாம் உங்களைத் தேடி வந்து சந்தித்தமைக்குக் காரணம் உண்டு. ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயகக் கட்சிகளையும் நாம் சந்திக்கின்றோம். இன்று விலகிப் போக இருந்த கோட்டாபய ராஜபக்ச, ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகின்றார். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,  உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன, மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம். மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை. நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளைப் பேண விரும்புகிறோம். மலையகத் தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம் – என்று கெலும் அமரதுங்க கூறினார்” – என்றார் மனோ கணேசன்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version