சீரற்ற காலநிலை! – மண்சரிவால் 25 பேர் பாதிப்பு

மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19.05.2022) காலை 6.30 மணியளவில் தொடர் குடியிருப்புகள் உள்ள தொகுதியின் பின்புறத்தில் 50 அடி உயரத்திலுள்ள மதில் சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமாகி உள்ளது.

இதன்போது ஒரு வீட்டில் இருந்த 53 வயதுடைய தாய் ஒருவருக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த தாய் உடனடியாக தலவாக்கலை தோட்டத்தில் இயங்கும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அத்தோடு, கர்ப்பிணித் தாயொருவர் எவ்வித ஆபத்துக்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

அத்தோடு வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மண் சரிந்து விழுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நுவரெலியா பிரதேச செயலகம்‌ மற்றும் தலவாக்கலை பொலிஸார். நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Photo 11

#SriLankaNews

Exit mobile version