கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காலிமுகத்திடல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி 170 பேரிடம் இதுவரையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக வீடுகளை சேதப்படுத்தியமை, தீ வைத்தமை, வாகனங்களுக்கு சேதப்படுத்தியமை உள்ளிட்ட 707 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் இதுவரையில் 230 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் மொரட்டுவைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் மொரட்டுவை – மொரட்டுவைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கைதானவர், மொரட்டுவை மாநகர சபையில் சேவையாற்றும் 49 வயதுடைய ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment