அரசியல்
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம்! – சஜித் சூளுரை
மக்களை அழித்து, நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்த ராஜபக்ச தலைமுறையும், ராஜபக்ச அரசையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அத்துடன் மாத்திரம் நின்று விடாது வரம்பற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாமல் ஒழிக்கப்படும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதனை நிறைவேற்றும் பொருட்டு மக்கள் ஆசியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்த ஐக்கிய கமத்தொழிலாளர் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பேரணி நேற்று தெஹியத்தகண்டி நகரில் நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கியிருந்தார். அப்பகுதி விவசாயிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகக் கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்துப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் பதிலுக்குக் கைகளை உயர்த்தி அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஜனாதிபதி பதவியாக இருக்கட்டும், பிரதமர் பதவியாக இருக்கட்டும், அது ஒரு அமைச்சுப் பதவியாக இருக்கட்டும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியாக இருக்கட்டும், இவை அனைத்தும் தங்கள் குடும்ப வயிற்றை நிரப்பிக்கொள்வதற்கான தொழிலாக கருதிக்கொள்ளக்கூடாது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களின் நலன் மேம்பாட்டுக்காவே மக்கள் இந்தப் பதவிகளை வழங்குகிறார்கள் என்பதை மனதில்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சீர்கெட்ட ராஜபக்ச ஆட்சியின் முடிவு மிக அருகில் உள்ளது எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டையும் மக்களையும் அழிவுக்கு இட்டுச் சென்ற ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பொதுமக்களும் அணிதிரண்டுள்ளனர் எனவும் மேலும் கூறினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login