ஜனாதிபதியுடனான சந்திப்பு! – நிகழ்ச்சி நிரல் அவசியம் என்கிறார் சுரேஷ்

20220317 103002

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை. தமிழ் மக்களை இந்த அரசாங்கத் தரப்பினர் மிகவும் மோசமாகத் தான் நடத்துகின்றனர். ஒரு பேச்சுவார்த்தைக்கான சரியான ஒரு சூழலைக்கூட இந்த அரசாங்கத்தால் உருவாக்க முடியவில்லை.

ஒரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டு மறுபக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் மரணச் சான்றிதழும், ஒரு இலட்சம் ரூபா பணமும் வழங்க இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடிய விடயம்.

எனவே, காணி கபளீகரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பொருளாதார நெருக்கடி குறித்தும் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்லவுள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

என்னென்ன அமைச்சு சார்ந்த விடயங்களில் பிரச்சினைகள் உள்ளது என்பதை தீர்மானித்து முன்னரே ஜனாதிபதியிடம் அறிக்கையாக கொடுக்கும்போது அது சார்ந்த அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஒரு தீர்க்கமான முடிவொன்றை பேச்சுவார்த்தையில் பெற்றுக்கொள்ள முடியும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version