மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ‘எச்சரிக்கை மட்டத்தை’ எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும்
ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலும் மற்றும்
தென் மாகாணத்தில், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையினால், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதியளவு தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்துதல்.
கடுமையான உடலுழைப்பைக் கோரும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுதல் அல்லது தவிர்த்தல்.
இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல்.
வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருத்தல் .

