நாட்டில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களிலுள்ள தொடருந்து தண்டவாளங்கள் மிக மோசமான சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மலையக தொடருந்து மார்க்கத்தின் “பலன” (Balana) பகுதியின் பல இடங்களில் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
மண்சரிவுகளால் தண்டவாளங்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழுதுபார்க்கும் பணிகள் இடம்பெறும் வரை, மக்களுக்குத் தடையற்ற போக்குவரத்து வசதியை உறுதி செய்வதற்கான இடைக்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உள்ளூர் மக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
தொடருந்துப் பாதை முழுமையாக சீரமைக்கப்படும் வரை, பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக, கலஹா – கண்டி வீதி வழியாக கலஹாவிலிருந்து கண்டி வரை மேலதிக பேருந்து சேவைகளை இயக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புத் தரங்கள் உறுதி செய்யப்பட்டு, தொடருந்துச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சேதமடைந்த தண்டவாளப் பகுதிகளை விரைவில் மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

