நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு விசேட கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,033 கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரும் தற்போது பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோதலில் ஈடுபட்ட சில கைதிகள் அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.