நீர்மட்டம் குறைவு: நாளை மேலும் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!

world 30

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நிலவும் வரட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு அதிகரித்துள்ளமையால், நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (ஏப்ரல் 09, 2026) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மத்தேகொட, பிராக்மணகம, கிரிகம்பமுணுவ, தீபங்கொட, பொலிஸ்கஸ்ஓவிற்ற வீதி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். மேலும், குடமாதுவ முதல் 342 பஸ் வீதி வரையான பகுதி மற்றும் புபுது மாவத்தை முதல் 342 பஸ் வீதி வரையான பகுதிகளிலும் இந்த 12 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (ஏப்ரல் 08) இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஹோமாகம ஹைலெவல் வீதி, பிட்டிபன சந்தியிலிருந்து கலகெதர, மாவத்தகம, பாதுக்க வீதி (கொடகம முதல் லியன்வெல பாலம் வரை) ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அத்துடன் அத்துருகிரிய வீதி (கொடகம முதல் ஹபரகட வரை), தாம்பே ஹொரகல வீதி, மாதுலாவ ஹொரகல வீதி, சோமரத்ன மாவத்தை, ஆடிகல வீதி, எம்புல்கம வீதி, ரனால ஹபரகட வீதி, மொரகஹஹேன வீதி மற்றும் புவக்வத்த வீதி ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுலாகிறது.

நீர் விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர் வழங்கல் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், நிலவும் வரட்சியான வானிலையைக் கருத்திற் கொண்டு நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு நீர் வழங்கல் சபையின் 1939 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.

 

Exit mobile version