முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர் அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது துப்பாக்கியை பயன்படுத்தி தானே சுட்டுக்கொண்டதாக சாட்சியமளித்துள்ள அவர்,16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக தான் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அளித்த சாட்சியத்தில், இந்த நீண்ட காலத்தில் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் துப்பாக்கியைக் கேட்டதில்லை என்றும், உடற்பயிற்சி செய்யச்செல்லும் போது தண்ணீர் போத்தல் எடுத்துச்செல்வதுமில்லை எனவும், என்னை எடுத்து வரச்சொல்வதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சம்பவம் நடந்த அன்று அவர் உடற்பயிற்சிக்கான ஆடைகளை அணிந்திருந்தார். வழக்கமாக உடற்பயிற்சிக்கு ஆயத்தமாகும் போது காலணி அணிவது வழக்கம், ஆனால் அன்று அவர் காலணி அணிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அவர் என்னிடம், ‘பிரசன்ன, உனது துப்பாக்கியை பரிசோதித்து பார்க்க வேண்டும், அதைக்கொடு’ எனக்கேட்டார். நான் துப்பாக்கியை மட்டும் கொடுத்தேன், தோட்டாக்களைக் கொடுக்கவில்லை. பின்னர், ‘பரிசோதிப்பதற்கு தோட்டாக்கள் அடங்கிய மெகசினையும் கொடு’ என கேட்டதால், அதையும் வழங்கினேன்.
துப்பாக்கியையும் மெகசினையும் கையிலெடுத்த அவர், ‘பிரசன்ன, உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும், ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வா’ என்று கூறியுள்ளார்.
நான் தண்ணீர் போத்தல் எடுக்கச்சென்ற கணத்தில் துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டது. ஓடிவந்து பார்த்தபோது அவர் துப்பாக்கிச்சூட்டுடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை முல்லேரியாவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறியக்கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சாரதி மற்றும் சமையல்காரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மெகசின் மற்றும் வெற்றுத்தோட்டா உறை ஆகியவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

