நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கொள்கையை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, கைகாவல பகுதிகளுக்கு நேற்று (டிசம்பர் 13) விஜயம் மேற்கொண்ட போது அவர் இந்தக் கருத்தை ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இயற்கை பேரிடர்கள் மற்றும் அனர்த்தங்கள் நிகழும் போது அவற்றின் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இந்தப் பேரிடரின் போது எடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களமும் வானிலை ஆய்வாளர்களும் டிசம்பர் 11ஆம் திகதி முதல் வானிலை மோசமடையும் என்றும், 10 நாட்களில் அது புயலாக உருவெடுக்கும் என்றும் படிப்படியாக நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்து வந்தனர்.
முன்னறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த இந்தக் காலகட்டத்தில், மக்களை வெளியேற்றவும், அனர்த்த முன்னாயத்தத் திட்டங்களை முன்னெடுக்கவும் இயலுமை காணப்பட்ட போதிலும், இதனை எதிர்கொள்வதற்குத் தேவையான இடர் முகாமைத்துவத் திட்டம் ஒன்று இந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
மோசமான வானிலை குறித்த கணிப்புகள் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டும், அரச பொறிமுறை ஏன் முறையாக நடந்து கொள்ளவில்லை மற்றும் இந்தக் கணிப்புகளைப் பொருட்படுத்தாமல் இருந்தது என்பதில் இன்று வரையிலும் பிரச்சினை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் இடர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தார். நாட்டிற்குப் புதிய இடர் முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம்.
புத்தளம் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் டாப்ளர் ரேடார் (Doppler Radar) கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். நவீன உபகரணங்களுடன் கூடிய வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் திறன் கொண்ட பிராந்திய சர்வதேச மையமாக நாட்டை மாற்ற வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சகத்தை ஒரு நேரடி அமைச்சகமாக மாற்ற வேண்டும். அனர்த்த முகாமைத்துவத் துறை ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்துச் செயற்பட வேண்டும். கீழ் மட்டத்தில் இருந்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை நியமித்து, ஆபத்தான பகுதிகளை அடையாளம் கண்டு, வலுவான கட்டமைப்பிற்குள் அமைந்த ஒரு திட்டத்தை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.