மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று காலை மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கந்த பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ன
கடந்த ஜூலை 19 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயானத்தில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்றிருந்தனர்.
அத்துடன், கல்கிசை பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவமும் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த, இரண்டு குற்றச் செயல்களுக்கும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் அத்திட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்தக் குற்றச் செயல்கள் அனைத்தும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அத்துடன், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கைத்தொலைபேசிகள் மற்றும் 55,000 ரூபாவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

