நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்!
நல்லூர்க் கந்தனை தரிசிக்க கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட அட்டை அவசியம் என்று யாழ்ப்பாண மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது பரவிவரும் கொவிட் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த வருட உற்சவம் முழுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் இடம்பெறவுள்ளது.
எனவே நல்லைக் கந்தன் அடியார்கள் இத்தகைய நெருக்கடி மிக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடனும் மிக அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்துக்கு வருவதை முற்றாகத் தவிர்கவும். அடியார்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியார்களும் முத்திரை சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஆலயத்தினுள் அடியவர்கள் எத்தனை பேரை அனுமதிப்பது என்பது அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும். இதற்கு அடியார்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் – என்றுள்ளது.
Leave a comment