இந்தியாவில் மீண்டும் ஒரு உலங்குவானூர்தி விபத்து! பயணித்த அனைவரும் பலி.. உடல்கள் மீட்பு

25 684e9c22864ee

புதிய இணைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்து 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விபத்தில் இறந்த எழுவரின் உடலையும் மீட்டுள்ளனர்.

கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சீரற்ற காலநிலையின் காரணமாக விமானியால் உலங்குவானூர்தியை இயக்க முடியாமல் போயுள்ளது.

கவுரிகுந்த் என்ற பகுதி மீது உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்த பொழுது மேலும் லெ்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் நிலைமையை விமானியால் சமாளிக்க இயலவில்லை.

சிறிது நேரத்தில் அந்த உலங்குவானூர்தி சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, உலங்குவானூர்தி தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் பயணித்த எழுவரும் உயிரிழந்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் – கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி பயணித்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் ஏழு பேர் பயணித்திருந்த நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தற்போது அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த உலங்குவானூர்தி காணாமல் போனதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதாக உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த உலங்குவானூர்தியில், ஒரு விமானி உள்ளிட்ட ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமான விபத்திற்கு சீரற்ற காலநிலை ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி குஜராத்தின் – அகமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்து உலக விமானப் போக்குவரத்துத் துறையை உலுக்கியிருந்தது.

இதில், விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்திருந்த நிலையில், ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்திருந்ததுடன் ஏனைய அனைவரும் உயிரிழந்திருந்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதுடன், விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் என்று மொத்தம் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், மீண்டும் இன்று காலை இந்தியாவில் இடம்பெற்ற இந்த உலங்குவானூர்தி விபத்து ஒருவித அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.

Exit mobile version