அண்மைய அனர்த்தங்கள் காரணமாக இலங்கையின் விவசாயத்துறை மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியாளர் எல்.ஏ.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் இயற்கை இடர் காரணமாக முற்றாகச் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த நிலங்களில் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் இந்த போகத்திலேயே மீண்டும் பயிரிடத்தக்க வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
கால்வாய்கள், நீர்வழிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நாட்டின் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட மொத்தச் சேதம் 22 பில்லியன் ரூபாயை நெருங்கியுள்ளது.
இந்த பாரிய சேதங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள் ஏற்கனவே தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், எஞ்சிய நீர்ப்பாசனக் கட்டுமானங்களை நிரந்தரமாகச் சீரமைப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.