வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே ஆகும் எனப் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாத்தறை பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட அபாயகரமான காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, லசந்த விக்ரமசேகர சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்று முன்தினம் (அக்22) தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

