ஆசிரியர் இடமாற்றத்தில் கிண்ணியா வலயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆசிரியர்களை சமப்படுத்தல், பதிலீட்டு ஆசிரியர்களை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் கடந்த 3ஆம் திகதியிடப்பட்டு தங்களது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் கிண்ணியா வலயத்திலிருந்து 51ஆசிரியர்கள் வெளி வலயங்களுக்கு இடமாற்றப்படும் அதே வேளை, 2ஆசிரியர்கள் மட்டுமே அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலின்படி ஒரு பாடசாலையில் உயர்தர வகுப்புக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றப்படும் அதேவேளை, அப்பாடசாலைக்கு பதிலாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அப் பாடசாலையில் உயர்தர வகுப்புக்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெளி மாகாணங்களிலும், வெளி வலயங்களிலும் நீண்ட காலம் பணியாற்றி சமீப காலங்களில் கிண்ணியா வலயத்திற்கு இடமாற்றம் பெற்றவர்களும் இந்த இடமாற்றப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றப்பட்டியல் வலயக்கல்வி அலுவலகத்தின் துணையின்றி மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டதாகவே நான் உணர்கிறேன்.
ஏனெனில் வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து ஆசிரியர் பட்டியல் பெறப்பட்டிருந்தால் மேலதிக ஆசிரியர்கள் இருந்தால் மேலதிக ஆசிரியர்களின் விபரங்களை அவர்கள் வழங்கியிருப்பார்கள்.
ஆனால் மேலதிக ஆசிரியர்கள் இல்லாத பல பாடசாலைகளில் அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். என்றுள்ளது.
#SrilankaNews
Leave a comment