கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

44520176 vijay33

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. (CBI) அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

2025 செப்டம்பர் 27 அன்று கரூர், வேலுசாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மிகக்கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கைச் சி.பி.ஐ. அதிகாரிகள் பொறுப்பேற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா? மற்றும் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த, த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. முறைப்படி அழைப்பாணை விடுத்துள்ளது.

அழைப்பாணையின் படி, எதிர்வரும் ஜனவரி 12-ஆம் திகதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் அல்லது சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்த விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version