கந்தரோடையில் அதிரடி மாற்றம்: விகாரை பெயர்ப்பலகை அகற்றப்பட்டு வரலாற்றுச் சிறப்பம்சங்கள் மும்மொழிகளில் பொறிப்பு!

MediaFile 6 1

யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, கந்தரோடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் இன்று முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்த ‘கந்தரோடை விகாரை’ எனும் பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

குறித்த இடம் ஒரு மதத் தலமாக மாத்திரம் அடையாளப்படுத்தப்படாமல், ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அழைக்கப்படுவதே பொருத்தமானது எனப் பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அகற்றப்பட்ட பெயர்ப்பலகை இருந்த அதே இடத்தில், ஒல்லாந்தர் (Dutch) காலத்தில் அமைக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற சந்தைக் கட்டடத் தொகுதியின் சிறப்பம்சங்களை விளக்கும் புதிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கல்வெட்டு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலச் சந்ததியினருக்குக் கந்தரோடையின் உண்மையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றைத் திரிபுகளின்றி கொண்டு செல்வதே இதன் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தரோடை தொல்லியல் தளம் இலங்கையின் மிகப்பழமையான வரலாற்று இடங்களுள் ஒன்று. கடந்த காலங்களில் இதன் பெயரிடல் மற்றும் உரிமை கோரல்கள் தொடர்பாகப் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிலவி வந்த நிலையில், உள்ளூராட்சி சபையின் இந்த நடவடிக்கை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

 

 

 

Exit mobile version