நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடரலாம்: விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

24 671f3afd3a539

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ‘இசுருபாய’ கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவைக் கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தலங்கம பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, சில கடுமையான நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

போராட்டமானது சட்டத்திற்கு உட்பட்டு முழுமையாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பெலவத்தை – பன்னிப்பிட்டிய வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கோ அல்லது பாதசாரிகளுக்கோ எவ்வித இடையூறுகளும் ஏற்படக்கூடாது.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L Exam) எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் கடமைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது.

போராட்டத்தின் போது அதிக சத்தம் எழுப்பக்கூடாது. வினாத்தாள் விநியோகம் மற்றும் ஏனைய போக்குவரத்துப் பாதைகளை மறிக்கக் கூடாது. அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தக் கூடாது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களை மீளப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பதவிலகலை வலியுறுத்தியும் விமல் வீரவங்ச தலைமையில் இந்தப் போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் இதனைத் தடுக்க முயன்ற போதிலும், நீதிமன்றம் போராட்டக்காரர்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், பொது ஒழுங்கைப் பேண நிபந்தனைகளை விதித்துள்ளது.

 

 

Exit mobile version