கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகல நிறைவு: 13,000 பக்தர்களுடன் பவனி!

04 4

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுமார் 13,000 பக்தர்கள் கலந்து கொண்டு தீவினை நிரப்பினர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் தகவல்களின்படி, இதில் ஏறத்தாழ 9,000 பேர் இலங்கையிலிருந்தும், 4,000 பேர் இந்தியாவிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளாரால் கொடியேற்றப்பட்டு ஆரம்பமான இந்தத் திருவிழா, தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெற்றது. நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றதுடன், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இன்று சனிக்கிழமை (28) காலை, இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் தலைமையில் திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சத்தீவு திருவிழாவில், இம்முறை 13,364 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

 

Exit mobile version