தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்துக்களைக் கோருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிபுணர் குழு, கடந்த 11 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று மொழிகளிலும் இந்தச் சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் அமையும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது இறுதிச் சட்டமூலம் அல்ல. அமைச்சரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ இதனைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, மக்களின் ஆலோசனைகளைப் பெற்று அதில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் காவல்துறையினரின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் பொதுமக்கள் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும். 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும்.
நீதியமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk இல் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆக்கபூர்வமான கருத்துக்களை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெறப்படும் அனைத்து ஆலோசனைகளும் மீண்டும் அதே நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

