பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சின் பணிகளை 2026 புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், பொதுமக்கள் அரசாங்கப் பணிகளைச் சிரமமின்றிப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்துப் படிவங்களும், எதிர்வரும் மாதத்திற்குள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கிடைப்பதற்கு வசதி செய்யப்படும்.
ஒரு பிரஜை தனது சொந்த மொழியில் சேவைகளைப் பெறும்போதும், சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப்படுவதை உணரும்போதும் மட்டுமே உண்மையான தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பிற்கு ஒரு பெரும் சோதனையாக அமைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்:
பேரழிவு ஏற்பட்ட போது இலங்கை மக்கள் இனம், மதம், மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்ததன் மூலம் “இலங்கையர்” என்ற கூட்டு வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த மீண்டெழும் தன்மையே தேசத்தின் உண்மையான அடித்தளம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படைகளின் வீரர்கள் நினைவுகூரப்பட்டதுடன், அரச ஊழியர்களின் சேவைக்கான சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.