தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட விவசாாயிகளுக்கு சென்னை நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பலவிதமான தண்டனைகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் பரம்பிக்குளம் பிரதேசம் விவசாயத்திற்கு பெயர் போன பூமி.
குறித்த பிரதேசத்தில் பரம்பிக்குளம்- ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, திட்டத்தின் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தண்ணீர் சமமாக பங்கீடு செய்ய வேண்டுமெனவும், அனுமதி பெற்றாலும் சட்டவிரோதமாக அதிக தண்ணீர் எடுப்பதால், மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
முறைகேட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை, நீர் வள அமைப்பு, மின் வாரியம் ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.
அதனையடுத்து வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் தரப்பில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதிகாரிகள் வருகையை முன்கூட்டியே அறிந்து, குழாய்களை அகற்றிவிட்டு, ஆய்வு முடித்து சென்றபின் மீண்டும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி,
அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுப்பது தவறு மற்றும் சட்டவிரோதமானது. சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், மதிப்புமிக்க அதை முறையாக பாதுகாக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக்கூடாது எனவும், மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்புப் பட்டியிலில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.