தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,பாடசாலை நேர அட்டவணை தொடர்பாகவே இதுவரை நான்கு சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலை நேரம் மீண்டும் 1.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஒரு ‘தற்காலிக முடிவு’ என அரசு கூறுவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய மறுசீரமைப்புகள் தேசிய மக்கள் சக்தியின் சொந்தத் திட்டங்கள் அல்ல. இவை கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் முன்மொழியப்பட்டு, ரணில் விக்ரமசிங்க காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படாத தோல்வியடைந்த திட்டங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE) உள்ள பிரதான அதிகாரிகளுக்கு இந்த மறுசீரமைப்பு குறித்துப் போதிய புரிதல் இல்லை எனவும், அவர்களுக்குத் தகுதிகள் இல்லை எனவும் அவர் சாடினார்.
ஆங்கிலப் பாடத்தொகுதியைத் தயாரித்ததில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்துப் பேசிய அவர், இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) செல்வது காலத்தைக் கடத்தும் செயல் எனக் குறிப்பிட்டார்.
பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், கல்வி அமைச்சினால் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காமல், இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வு காண வேண்டும்.
கல்வி மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறான திசையில் செல்வதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறைமையையும் பாதிக்கும் எனவும் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.