ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி (Sanae Takaichi), அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ் சபையை (House of Representatives) கலைத்துவிட்டு, பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக இன்று (19) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) பாராளுமன்றத்தின் கீழ் சபை முறைப்படி கலைக்கப்படும்.
தேர்தல் பிரச்சாரங்கள் ஜனவரி 27-இல் ஆரம்பமாகி, பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 அக்டோபர் 21-இல் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற சனா தகாய்ச்சி எதிர்கொள்ளும் மிக முக்கியமான முதல் தேர்தல் களம் இதுவாகும்.
பிரதமர் சனா தகாய்ச்சி இந்த அதிரடி தற்போது தனக்கு மக்களிடையே நிலவும் அதிகப்படியான ஆதரவைப் (High Approval Ratings) பயன்படுத்தி, பாராளுமன்றத்தில் தனது ஆளும் கூட்டணியின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த விரும்புகிறார்.
ஜப்பானின் பாதுகாப்பு வியூகத்தை நவீனப்படுத்தவும், பொருளாதார ஊக்கத்தொகைகளை வழங்கவும் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதே இவரது முக்கிய இலக்காகும்.
இருப்பினும், இந்தத் தேர்தல் அவருக்குச் சுலபமான ஒன்றாக இருக்காது எனக் கருதப்படுகிறது. ஜப்பான் மக்கள் தற்போது சந்தித்து வரும் கடும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அண்மைய ஆய்வில் 45 சதவீதமான மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளித்துள்ளனர். பாதுகாப்பு விவகாரங்களுக்கு 16 சதவீதம் பேரே முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.