யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த CT ஸ்கேன் (CT Scan) இயந்திரம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக CT ஸ்கேன் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளர்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர பாதிப்புடைய நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதுடன், தனியார் வைத்தியசாலைகளை நாடி அதிக பணம் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
பழுதடைந்திருந்த இயந்திரத்தின் திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, இன்று (20.01.2026) காலை முதல் பரிசோதனைச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இனிவரும் காலங்களில் எவ்வித இடையூறுகளுமின்றித் தடையற்ற முறையில் நோயாளிகளுக்குச் சேவைகள் வழங்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் நோயாளர்களுக்கு இந்தச் சேவையின் மீளாரம்பம் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் இனி தடையின்றிப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.