கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

04 1

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த கலந்துரையாடல் நேற்று யாழ். ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் உட்படப் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்படுவதைத் தடுப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இக்கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தினால் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாரிய நில அபகரிப்பு விவகாரங்கள், பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் யானை – மனித மோதல் போன்ற பாதகமான விளைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, இத்திட்டத்தின் பின்னணியில் அரசாங்கம் கொண்டுள்ள மறைமுக அரசியல் இலக்குகள் மற்றும் எல்லைக் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர். வடக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு இத்திட்டம் எவ்வாறு எரியூட்டுவதாக அமையும் என்பதும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் முடிவில், இந்தப் பாதிப்புகளை நேரில் ஆராய்வதற்காக அரசியல் தரப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்குக் கள விஜயம் (Field Visit) மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விரிவான கூட்டறிக்கை ஒன்றைத் தயாரித்து, அதனை உள்நாட்டிலுள்ள முற்போக்கு அமைப்புகளுக்கும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் சமர்ப்பித்து சர்வதேச ரீதியான அழுத்தங்களைக் கொடுப்பதெனவும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

 

Exit mobile version