யாழ் பிராந்திய பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெ. சுலக்சன் என்பவரே யாழ் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரால் இவ்வாறு மிரட்டப்பட்டுள்ளதோடு, அநாகரீகமாக பேசியும் உள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடை உரிமையாளருக்கும், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாட்டை காரணமாகக் கொண்டு குறித்த தமிழ் பொலிஸ் அதிகாரி அக்கடைக்கு வருபவர்களை அகற்றும் பணிகளையும், அவ்விடத்தில் வாகனம் நிறுத்துவதையும் தடை செய்து வந்துள்ளார்.
குறித்த அத்தேநீர் கடைக்கு வந்த ஒரு நபரை முரண்பாட்டின் காரணமாக கடமைக்கு இடையூறு விளைவித்தார் என குற்றம் சாட்டி கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார். பின்னர் அவரை பிணையில் விடுவித்துள்ளார்.
தன்னுடைய கடமை நேரத்தில் கடமையை கைவிட்டு இவ்வாறு செயற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விடயம் அறிந்து தகவல் சேகரிக்க குறித்த கடைக்குச் சென்ற ஊடகவியலாளரிடமும் மோட்டார் வண்டியை இங்கு நிறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளதோடு, கடைக்காரரிடம் பேசுவதற்கும் தடை பிறப்பித்துள்ளார்.
தான் ஊடகவியலாளர் என்பதை அடையாளப்படுத்திய பின்னரும் தகவல் சேகரிக்க முற்பட்ட ஊடகவியலாளரிடம் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறைபாடு செய்வதற்கு முற்பட்ட போது அதற்கும் தடை விதித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்விடத்தை விட்டு அகன்று செல்லுமாறும், பொறுப்பதிகாரி தற்சமயம் இங்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment