இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான முக்கிய அரசியல் சந்திப்பொன்று இன்று (21) கிளிநொச்சியில் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 1:30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA Replacement) வரைவு குறித்து தமிழ் தரப்பு எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் எதிர்கால கூட்டுச் செயல்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது.
இச்சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் மற்றும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான பாலன் மாஸ்ரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியுடன், தமிழரசு கட்சியின் தலைவர் நடத்திய இந்தச் சந்திப்பு வடபுல அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.