“ உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல, அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலகத்தில் அலுவலகமொன்று உள்ளது. அதன் ஊடாகவே அழைப்புக் கடிதங்கள் அனுப்படும்.”
இவ்வாறு வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.
‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான திட்டத்தின்கீழ் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது உறுப்பினர்களுக்கு உரிய நேரத்தில் அழைப்பு விடுக்காமை தொடர்பில் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் அதிருப்தி வெளியிட்டார். அவ்வேளையில் அவருக்கும், அங்கஜனுக்கும் இடையில் கருத்து பறிமாற்றங்கள் இடம்பெற்றன.
“ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்பதை அறிந்தகையோடு, உரிய தரப்புகளை தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.” என அங்கஜன் பதிலளித்தார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிக்கோ, கடந்த 15ஆம் திகதி குறித்த கூட்டங்களிற்கான கடிதம் ஒன்று மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இங்கே எமக்கு 17ஆம் திகதி திகதி இடப்பட்டு எமக்கு தொலைநகல் மூலமாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது .” – என்றார்.
இதற்கு பதில் அளித்து அங்கஜன் ராமநாதன், உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல. மாவட்ட செயலகத்தில் அதற்கென அலுவலகம் உள்ளது. அதன் ஊடாக அழைப்பு கடிதம் விடுக்கப்படும்.”- என்றார்.
#SriLankaNews