ஈரான் பாடசாலைத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம்: ஐ.நா.வில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி காட்டம்!

Untitled 13

ஈரானியப் பாடசாலை மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டமை ஒரு ‘தவறான தாக்குதல்’ அல்ல, அது திட்டமிட்ட ‘போர்க்குற்றம்’ என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) சர்வதேச அரங்கில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) நேற்று (மார்ச் 27, 2026) காணொளி வாயிலாக உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த மாதம் பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் போரைத் தொடுத்த நிலையில், ஈரானின் மினாப் (Minab) நகரிலுள்ள தொடக்கப் பாடசாலை ஒன்றின் மீது அமெரிக்காவின் ‘டொமஹாக்’ (Tomahawk) ஏவுகணை விழுந்து வெடித்தது. இதில் 175 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலை ஈரானே நடத்தியிருக்கலாம் என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த போதிலும், பின்னர் அது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டது. பழைய இராணுவத் தரவுகளின் அடிப்படையில், ஈரான் இராணுவத் தளம் இருந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டதால் தவறுதலாகப் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த விளக்கத்தை வன்மையாக மறுத்துள்ள அப்பாஸ் அராக்சி, “நவீன தொழில்நுட்பங்கள் மூலம் துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டதாகக் கூறும் அமெரிக்காவும் இஸ்ரேலும், ஒரு பாடசாலையைத் தவறுதலாகத் தாக்கின என்பதை எவரும் நம்ப மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டார். இது வேண்டுமென்றே அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு மனிதாபிமானமற்றச் செயல் என்றும், இதனை அராஜகம் என வர்ணித்த அவர், இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சாடினார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குச் சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருமித்த கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் கல்வி நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், உலக நாடுகள் மௌனம் காப்பது இத்தகைய போர்க்குற்றங்களை ஊக்குவிக்கும் செயல் எனவும் கவலை வெளியிட்டார். மினாப் பாடசாலைத் தாக்குதல் தொடர்பான விரிவான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஈரான் இதன்போது வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version