சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வந்த அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், உலகப் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதித்திருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்பட்ட தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் விளைவாக, லெபனானில் 10 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையை இனி உலக நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் இணங்கியுள்ளது. “இது உலகிற்கு ஒரு சிறந்த மற்றும் பிரகாசமான நாள்” என டிரம்ப் தனது பதிவில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
உலகின் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக இந்தப் பாதையில் நிலவிய முடக்கம் காரணமாக எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தற்போது ஈரான் தனது கடற்படையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் வணிகக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தப் பாதையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. இது சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையைச் சீர்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான விரிவான அமைதி ஒப்பந்தம் விரைவில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கையெழுத்தாகலாம் எனத் தெரியவருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையளிக்கத் தெஹ்ரான் முன்வந்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை இந்த ஒப்பந்தம் இறுதியாவதில் சில சவால்கள் நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

