கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான செய்திப் பரிமாற்றங்கள் பாகிஸ்தானிய இடைத்தரகர் மூலம் ‘தொடர்ந்து நடைபெற்று வருவதாக’ ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். “ஈரானின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்த சந்திப்புகளிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது” என அவர் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிலிருந்து உயர்மட்டத் தூதுக்குழுவொன்று இன்று (ஏப்ரல் 16) ஈரானை வந்தடையவுள்ளது. இக்குழுவினருடன் ஈரான் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ள நிலையில், அதனை நீடிப்பது மற்றும் அமைதி உடன்படிக்கையை எட்டுவது குறித்து இந்தப் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அமையவுள்ளன.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பாகாயி முற்றாக நிராகரித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் முழுக்க முழுக்க “அமைதியானது” என்றும், நாட்டின் தேவையின் அடிப்படையில் யுரேனியத்தைச் செறிவூட்டுவதைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும், செறிவூட்டலின் வகை மற்றும் அளவு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் ஒரு இணக்கமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் இராஜதந்திர முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றி சர்வதேச அளவில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் “அணு ஆயுதமில்லாத ஈரான்” என்பதில் உறுதியாக உள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சி போரை முடிவுக்குக் கொண்டுவருமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.