மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
மதுபான சாலைக்கான அனுமதி வழங்குவதில் இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என அமைச்சர் விளக்கமளித்தார். விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்குதல்.
விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா, தூரத்திற்குக் குறைவாக அந்தப் பகுதியில் மதுபானசாலை அமைக்க முடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படும்.
அரச அதிகாரிகளினால் இந்த விடயங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றே நிதி அமைச்சின் செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
எனினும், விலை மனுதாரர்களைத் தெரிவு செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள மோசடி குறித்தே அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.