பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பரபரப்பு: கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

world 143

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (ஏப்ரல் 13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலை ஊழியர் ஒருவர் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் மிதப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலன்னறுவை தலைமையக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட சிசு யாருடையது? அல்லது இது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்குப் பிறந்த குழந்தையா? என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. வைத்தியசாலையின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்றுள்ள இந்தத் துயரமான சம்பவம் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version