இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
பெற்றோர் வழி தாத்தாக்கள் அப்போதைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். ரிஷி சுனக் தந்தை யாஷ்வீர் சுனக், இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற மருத்துவர். தாய் உஷா சுனக் மருந்து கடை நடத்தி வந்தவர்.
1960 ஆம் ஆண்டு கென்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு ரிஷி சுனக் குடும்பம் இடம்பெயர்ந்து சென்றது. ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். கர்நாடகாவில் உள்ள இன்போசிஸ் ஐ.டி.நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார். யார்க்ஷயர் தொகுதி எம்.பி.யாக அவர் பதவியேற்ற போது கையில் பகவத் கீதையை கொண்டு சென்றிருந்தார். போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக அவர் இருந்தார்.
இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தின் இளம் வயது பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பலவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இது ஒரு நல்ல செய்தி, உலகம் முழுவதும் இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக், அந்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில்,
200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதாகவும், இந்தியர்களின் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இன்று பல நாடுகளில் இந்தியர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது, பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று ஐம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரிட்டன் பிரதமராக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Indianews