இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய விமானங்கள் தனது வான்பரப்பைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
மாதந்தோறும் இந்தத் தடையை நீடித்து வரும் பாகிஸ்தான், தற்போது டிசம்பர் 24-ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த காலக்கெடுவை, எதிர்வரும் ஜனவரி 24, 2026 வரை நீட்டித்துள்ளது.
இந்தத் தடையானது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பயணிகள் விமானங்கள், இந்திய தனியார் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் இந்திய இராணுவ விமானங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வான்வெளிப் போர் நீடித்து வந்தாலும், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது, வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

