இனிவரும் காலங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே வாக்காளர் பட்டியல் என்றபடி தேர்தலை நடத்தவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 25ஆம் திகதி இந்தியாவில் தேசிய அளவில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது.
நேற்றைய தினம் இந்த நாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடி இருந்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி,
1950-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான நியாயமான தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தி அதன் கண்ணியத்தை பாதுகாத்து வருகின்றது.
நம் நாட்டில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
1950- 52 ஆம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவில் தான் வாக்குப்பதிவு இருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவாக வாக்குகள் பதிவு குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கல்வியறிவு கூடிய மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகின்ற நகர்புறங்களில் கூட குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தை தான் காண முடிகின்றது.படிப்பறிவு உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஆனால் வாக்களிக்க செல்வதில்லை.
ஆனால் இனி ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுவதை பாஜக தொண்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க சமீபகாலங்களில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது .
இது தேர்தலின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் .என்னை பொருத்தவரை தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார்.
Leave a comment