இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகள் தங்களது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
மேற்கு வங்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஐவர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த 100 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தாய்லாந்து, நேபாளம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விசேட சுகாதாரப் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளன.
நிபா வைரஸை ஒரு ‘அதி-ஆபத்தான நோய்’ (High-risk disease) என வகைப்படுத்த தாய்வான் அரசு தீர்மானித்துள்ளது.
இந்த வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடியது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இது பரவ வாய்ப்புள்ளது.
இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 40% முதல் 75% பேர் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது.இதற்கு முறையான தடுப்பூசிகளோ அல்லது நேரடி சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை என்பது இதன் பாரதூரமான தன்மையைக் காட்டுகிறது.
எல்லை தாண்டிய பரவலைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.