அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்பட 15 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது.
உலகின் சக்திவாய்ந்த அமைப்பான ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் முறைப்படி ஜி-20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோஜோ விடோடோ வழங்கினார். அடுத்த ஆண்டு ஜி-20 நாடுகளின் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது.
புதிய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் கடன் நிலைத்தன்மை மற்றும் பலதரப்பு அமைப்புகளின் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா முயற்சிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டை எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது,
“தற்போதைய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது உள்பட ஒரு நெகிழ்வான உலகளாவிய பொருளாதாரத்தை உருவாக்க அடுத்த ஆண்டு இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கு ஆதரவளிக்க நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்றார்.
#India