இலங்கையில், முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்று முக்கிய வீடமைப்புத் திட்டங்களுக்கான நிதி உதவியை இரட்டிப்பாக்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான இராஜதந்திர கடிதங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
உயர்மட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் கீழ், கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு I மற்றும் கிராம சக்தி தெற்கு II ஆகிய மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கைசாத்திடப்பட்டன.
இதன்படி, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தாமாகவே வீடுகளைக் கட்டும் முறைமையின் கீழ் தலா ஐந்து இலட்சம் இலங்கை ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்தது.
எனினும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ஒதுக்கப்பட்ட நிதி ஊடாக வீடுகளை முழுமையாகக் கட்டிமுடிக்க பயனாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை பத்து இலட்சம் ரூபாயாக அதிகரிக்க இந்தியா இணக்கம் தெரிவித்தது.
இந்த நிதி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கான கடிதங்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகாவத்த ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.
அதிகரிக்கப்பட்ட நிதியுதவியின் மூலம் ஆயிரத்து 550 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது