இலங்கையின் பொருளாதார மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குத் சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது முழுமையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF 2026) மாநாட்டிற்கு இடையே, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தவும், நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் வழங்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை மக்களின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுத்து வரும் நிலையில், இச்சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டாவோஸில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் குறித்து உலகளாவிய ரீதியில் நற்பெயரைப் பெறுவதற்கு இச்சந்திப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.