மாணவர்களின் கல்விச் சூழலுக்கு அச்சுறுத்தல்: கந்தளாய் பேராறு பாடசாலை முன்பாகக் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்!

Untitled 6

திருகோணமலை, கந்தளாய் பேராறு அல்-தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாகச் சட்டவிரோதமான முறையில் கோழிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சுகாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலை நுழைவாயிலுக்கும் கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கும் இடையிலான தூரம் வெறும் 15 மீற்றர் மாத்திரம் என்பதால், அங்கிருந்து வீசும் கடும் துர்நாற்றம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளைப் பாரியளவில் பாதித்துள்ளது.

இந்தக் கடும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் ஊதுபத்திகளை ஏற்றி வைத்தே கல்வி கற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். “சமூகப் பொறுப்பின்றிச் சிலர் பாடசாலைக்கு மிக அருகாமையில் கோழிக் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றனர். இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், ஒரு சுகாதாரமான கல்விச் சூழல் சீர்குலைந்து வருகின்றது” என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, இந்தக் கழிவுகள் தேங்கி நின்று நுளம்புப் பெருக்கு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பாடசாலைக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், இந்தக் கழிவு கொட்டும் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணக் கந்தளாய் பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பாடசாலைச் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அப்பகுதியைத் துப்புரவு செய்து, மீண்டும் குப்பைகள் கொட்டப்படாதவாறு உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version