இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தன்னை விடத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (09) எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப் ,
இதுவரை தான் 8 பெரிய போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தவை என்றார்.
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போராக மாறத் தொடங்கியிருந்தது. ஏற்கனவே 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. அந்த இக்கட்டான சூழலில் தலையிட்டு நான் போரை நிறுத்தினேன்” என அவர் உரிமை கோரினார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு வொஷிங்டன் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அணுசக்தி பலம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான போரைத் தடுத்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காகத் தனக்கு நன்றி தெரிவித்ததாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை விமர்சித்த ட்ரம்ப், “ஒபாமா எதற்காகவும் எதையும் செய்ததில்லை, அவருக்கு ஏன் அந்த விருது வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால், நான் நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.