கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் மிக விரைவில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு (In Vitro Fertilization – IVF) சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தந்த நாராயண தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வசதிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சையைப் பெற முடியாத தம்பதிகளுக்கு, பொதுச் சுகாதாரத் துறையினூடாக ஒரு நியாயமான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தற்போது இலங்கையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்தச் சேவை உள்ளது.
ஒரு முறை (One cycle) சிகிச்சைக்கு 2 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபா வரை செலவாகிறது.
இந்தச் சிகிச்சை முறை குறிப்பாக, கருப்பை குழாய்களில் அடைப்பு (Blocked fallopian tubes), விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், ஹோர்மோன் குறைபாடுகள், நீண்டகாலமாக இனங்காணப்படாத மலட்டுத்தன்மைபோன்ற குறைபாடுகள் உள்ள தம்பதியினருக்கு உதவுகின்றது.
அரச மருத்துவமனைகளில் இது அறிமுகமாவதன் மூலம் சாதாரண மக்களும் தங்களது பெற்றோர் கனவை நனவாக்க இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IVF என்பது ஒரு பெண்ணின் கருமுட்டையை உடலுக்கு வெளியே ஒரு ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருத்தரிக்கச் செய்து, பின்னர் அந்த கருவை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் மாற்றும் ஒரு மருத்துவ முறையாகும்.தம்பதியினரின் ‘பெற்றோர் கனவு’ நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.