அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகாமையில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று இன்று (06) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற தந்தை ஒருவர், வீதியோர வெற்றுக்காணியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அண்மையில் இந்தக் காணியில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதாலும் நிலத்தில் புதைந்திருந்த கைக்குண்டு வெளியே தெரிந்துள்ளது.
மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டுத் தயாரிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இப்பகுதியில் நிலவிய மோதல்களின் போது விடுதலைப் புலிகளினால் இது கைவிடப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய சவளக்கடை பொலிஸார் அவ்விடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டு வந்தனர்.
கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நீதவான் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, மக்கள் நடமாட்டமில்லாத பாதுகாப்பான இடத்தில் குண்டைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையிலான குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலைக்கு அருகிலேயே குண்டு மீட்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.