‘டிட்வா’ சூறாவளி மற்றும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நுவரெலியா – ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா, இன்று முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வழங்கிய பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமையவே பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் இன்னும் முழுமையாக நீங்காததால், பூங்காவின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளம் மற்றும் வனப் பூங்காவிற்குச் செல்லும் பாதைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க, தடை செய்யப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பூங்கா ஊழியர்களால் சுற்றுலாப் பயணிகளுக்கென விசேட உதவித் திட்டங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலத்திற்குள் சீரமைப்புப் பணிகளை முடித்து, பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகச் சுற்றாடல் அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளது.