கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களில் பாராளுமன்றத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சியினர் விரும்பினால், இந்த விவாதத்திற்காக இன்னும் கூடுதல் நாட்களை ஒதுக்கித் தருவதற்கும் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தை ஒரு சவாலாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகவே அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகச் சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்களை நீக்கவும், அதன் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் இந்த விவாதம் ஒரு சிறந்த தளமாக அமையும்.
கல்வித்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பாராளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை அளிக்கப் பிரதமர் தயாராக உள்ளார்.
எதிர்க்கட்சியினர் விரைவாக இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் சீர்திருத்தங்களின் யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்வர் என வலியுறுத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. எனினும், தரம் 06 சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவாதம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.