புதிய கல்வி மறுசீரமைப்புத் (New Education Reforms) திட்டம் தொடர்பாகத் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது என கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குளியாப்பிட்டிய கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“புதிய தொழிற்றுறையை உருவாக்கும் வகையில் கல்வி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாட்டில் வேலையின்மைப் பிரச்சினைக்குக் கல்வி கொள்கை ஒரு காரணியாக உள்ளது. இதற்குத் தீர்வாகவே புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த தீர்மானித்தோம்,” எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுடன் இந்த ஆண்டு முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், இனி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது, தீர்மானங்களைச் செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய மாற்றத்துக்கான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்றுக்கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே என்றும், புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மாறுபட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாடசாலை கற்பித்தல் நேரம் அதிகரிப்பு தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்தாண்டு முதல் அமுல்படுத்தப்படும்.
1-6 தரங்களுக்குரிய புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இந்த மாதம் இறுதியில் பகுதியளவில் நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.